பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 54. பொச்சாவாமை

அஃதாவது , அறிவாற்றல் படையரண் பொருள் புகழ் முதலியவற்றால் மகிழ்ந்து , நாடுகாத்தல் பகையழித்தல் முதலிய கடமைகளை மறந்து சோர்ந்திராமை . பொச்சாப்பினாற் சுற்றந்தழுவுதல் கூடாமையின் , இது சுற்றந்தழாலின் பின் வைக்கப்பட்டது.

 

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு .

 

சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு - மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அள விறந்த எரிசினத்திலும் தீயதாம்.

சிறந்தவுவகை பெருஞ்செல்வம் , இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும்புகழ் முதலியவற்றால் நேர்வது . அளவான வெகுளி பகைவரை யொடுக்குதற்கும் கொடியோரைத் தண்டித்தற்கும் வேண்டுவதாம். அளவிறந்த வெகுளி ஒருகால் கடும்பகைவரைக் கொல்ல உதவலாம். ஆயின், வினைச் சோர்வு தன்னையே கொல்லுதலால் அதனினுந் தீயதாயிற்று.