பக்கம் எண் :

இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னதுவொப்ப தில்.

 

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்குமாயின்; அது ஒப்பது இல் - அது போன்ற நன்மை வேறொன்று மில்லை.

செய்ய வேண்டிய வினைகளை உறவினரிடத்தும் பிறரிடத்தும் ஒப்பச் செய்ய வேண்டுமாதலின் யார்மாட்டும் என்றும், பெருகிய நிலையிலும் சுருங்கிய நிலையிலும் ஒருதன்மையாகச் செய்ய வேண்டுதலின் 'என்றும்' என்றும் , எல்லா வினைகளிலும் தப்பாது கையாள வேண்டுதலின் வழுக்காமை என்றும் , கூறினார் . 'வாய்' என்னும் வினை 'வாய்ந்தன ரென்ப' (தொல். 1582) , 'வாய்ந்தமலையும்' ( குறள் . 737) என்று மெலிந்தும் புடைபெயர்தலாலும் , செயப்படு பொருள் குன்றிய வினையாதலாலும் , 'வாயி' னென்பது முதனிலைத் தொழிற்பெயரடியாக வந்த வினை யெச்சம் என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாது.