பக்கம் எண் :

அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.

 

பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தினால் எண்ணிச் செய்தால் ; அரிய என்று ஆகாத இல்லை - செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவருக்கு முடியாத கருமங்கள் இல்லை.

இது பரிமேலழகர் கல்வியாரவார உரையைத்தழுவியது . மனத்திற்கு அகக்கரணம் என்று பெயரிருத்தலால் , 'கருவி' என்பதற்கு அவர் மனம் என்று பொருள் கொண்டார் , கரணம் கருவி. இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

'பொச்சாவாக்' கருவி என்னுந் தொடரைப் பொச்சாவாமையாகிய கருவி என்று இருபெயரொட்டாகக் கொள்வதே இயற்கையான முறையாம் . இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைத் தொழிற்பெயர் போல்வதாம் . இடைவிடா முயற்சியும் சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம்.