பக்கம் எண் :

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில்.

 

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் சான்றோரும் உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும் ; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அவற்றைச் செய்யாது மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லை.

அரசர்க்குரிய சிறந்த செயல்கள் ; வரலாற்றிற் கெட்டாத பண்டைக்காலத்திற் பெருங்கடலில் நாவாய்ப் படை செலுத்திச் சாலித்தீவைக் கைப்பற்றியமை , தூங்கெயிலெறிந்தமை , முக்கழகம் நிறுவியமை , மகனை முறை செய்தமை , சீன நாட்டினின்று கரும்பைக் கொணர்ந்து பயிரிட்டமை , பாரதப்போர்ப்படை யிரண்டிற்கும் பதினெண்ணாளும் பெருஞ்சோறு வழங்கியமை , ஓரிளைஞன் இருபெருவேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றமை , முரசு கட்டிலில் துயின்ற புலவனுக்குக் கவரி வீசியமை , பரிசிலனுக்குத் தலையீந்தமை , காவிரியணைகட்டியமை , பேரேரியுங் கிளையாறும் வெட்டியமை , தமிழ்வேந்தரை யிகழ்ந்த வடநாட்டரசரை வென்று பத்தினிக்குப் படிமை நிறுவியமை , வானளாவுங் கோபுரம் எடுத்தமை , துறைநகரமைத்துக் கடல் வாணிகம் பெருக்கியமை போன்றனவும் பிறவுமாம் . 'எழுமை' தொகைக் குறிப்பு . "சாதிதருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரயத்துன்பமே" என்று பரிமேலழகர் கூறிய ஆரியக்குறிப்பு இங்கு ஏற்காது.