பக்கம் எண் :

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.

 

பெண்ணின் பெருந்தக்க யா உள ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? ; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் -அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.

கற்பு என்பது கற்போல் உறுதியான இருபாலிடைக் காதற் பண்பு. கல் -கற்பு. "கற்பு றுத்திய கற்புடை யாடனை" என்று கம்பரும் (அயோத்தி. நகர்நீங்கு. 19) கூறுதல் காண்க. அது மணப்பருவம் வரை தோன்றாதிருந்து பின்பு ஒருவரையே காதலிப்பது; இருபாற்கும் பொதுவானது. ஆதலின், மனைவியையன்றி அணங்கையும் நோக்காத ஆண்கற்பும் கணவனையன்றிக் காவலனையும் நோக்காத பெண்கற்பும் எனக்கற்பு இருதிறப்பட்டதாம். இங்குக் கூறியது பெண்கற்பு என அறிக. இன்னும் இதன் விளக்கத்தைக் கற்பியலிற் காண்க.

கற்புடை மனைவியால் அறம்பொருளின்பப் பேற்றுடன் வாழ் நாளும் நீடிப்பதால், பெண்ணிற் பெருந்ததக்க யாவுள? என்றார். உண்டாகப் பெறின் என்பது உண்டாதலின் அருமை குறித்து நின்றது.