பக்கம் எண் :

வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.

 

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் .

நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம்.

"நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் , யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126)

என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .