பக்கம் எண் :

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல் .

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாயிருப்பது ; மன்னவன் கோல் - அரசனின் செங்கோலே.

பரிசாலும் முற்றூட்டாலும் நூலாசிரியரைப் போற்றுவதும் அவர்நூல் வழங்குமாறு அரங்கேற்றுவிப்பதும் அரசன் தொழிலாதலின் 'ஆதி' என்றார் . "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வு யிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான்" , என்று பிராமணரை விலக்கியதால் , இங்கு அந்தண ரென்றது தமிழ் அறிஞரையே . அந்தணர் என்பது சிறப்பாகத் துறவியரையே குறிக்குமேனும் , சிறு பான்மை இல்லறத்தாரையும் தழுவும்.

"வினையி னீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்".(தொல். 1564)

என்றதனால் , முதற்காலத்து முதனூல்களெல்லாம் முனிவராலேயே இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது . அதன் பின்பே இல்லறத்தாரான பார்ப்பாரும் நூலியற்றினர் . நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார் . முனிவர் ஐயர் எனவும் படுவர் . கடைக்கழகக் காலத்திலும் இளங்கோவடிகள் என்னும் தமிழ் அந்தணர் , இயைபுவனப் பியற்றியமை காண்க. அந்தணர் நூற்கு அரசியல் அடிப்படையாயிருந்தமைக்கு முக்கழக நடவடிக்கைகளே போதிய சான்றாம் . ஒழுக்கத்திற்கு அது தூண்டு கோலாயிருந்தது. "அச்சமே கீழ்கள தாசாரம்" ( குறள் . 1075) என்பதனாலும் , நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ( புறம் . 312) என்பதனாலும் , அறியப்படும் . நூற்கும் அறத்திற்கும் முந்தியே யிருந்ததனாலும் நிலைபெற்றதனாலும் 'நின்றது' என்றார்.

"அந்தணர்க் குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது ................ செங்கோல்" "அரசர் வணிக ரென்னு மேனையோர்க்கு முரித்தாயினும் , தலைமை பற்றி அந்தணர் நூலென்றார்" என்பன பரிமேலழகரின் ஆரியப்பிதற்றல்கள் . நூலென்றது மறைநூலை மட்டுமன்று . அங்ஙனங் கொள்ளினும் அது கடவுள் வழிபாட்டை அறவே அறியாத ஆரிய வேதத்தையன்று ; தமிழ் மறையையே குறிக்கும்.

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
என்று மாணிக்க வாசகர் பாடியிருத்தல் காண்க.

இன்னும் தமிழிலுள்ள பண்டை மறை (மந்திர ) நூல்களும் மருத்துவ நூல்களும் சித்தர் என்னும் முனிவர் இயற்றியவையே.