பக்கம் எண் :

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு.

 

குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை ; உலகு தழீஇ நிற்கும் - நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும்.

அன்பாக அரவணைத்துக் காக்கும் அரசனைக் குடிகளும் அன்பாகப் போற்றிநிற்பர் என்பது கருத்து.

அணைத்தல் இன்சொற் சொல்லுதலும் தளர்ந்த விடத்து வேண்டுவன கொடுத்துத் தாங்குதலும் . மாநில மன்னன் மூவேந்தருள் ஒருவனான பெருநில வரசன் . குறு நில மன்னர் , பெருநில மன்னர் என அரசர் இருதிறத்தினராதலால் , வேந்தனை மாநில மன்னன் என்றார் . கோல் , உலகு என்பன ஆகுபெயர் . கோல் என்ற தற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார் . ஓச்சுதல் உயர்த்துதல் . குடி என்றது தளர்ந்த குடிகளை , 'தழீஇ' இன்னிசையளபெடை.