பக்கம் எண் :

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

 

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று , அவன் அரசாட்சியே ; அதுவும் கோடாது எனின் - அவ்வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறிதவறாதிருந்த பொழுதே.

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்றார் மதுரை மருதனிளநாகனார் ( புறம் . 55) . வெற்றிதருவது வேலன்று கோல் என்னும் எதுகை நயமும் , எறியும் வேலன்று ஏந்தும் கோலே யென்னும்முரண்நயமும் , கவனிக்கத்தக்கன . அதூஉம் இன்னிசை யளபெடை . மணக்குடவர் 'கோடா னெனின்' என்று பாடங்கொள்வர் . அப்பாடத்திற்கு , கருவியின் வினை சினைவினை போல முதல் வினைமேல் நின்றதாகக் கொள்க .

'கோல் அதூஉம்' என்பது போன்றே , 'இல்வாழ்க்கை அஃதும்' ( 46) என்னும் தொடரும் அமைந்திருத்தலை , ஒப்புநோக்கி யுணர்க.