பக்கம் எண் :

கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்யு மரசு .

 

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.

வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோலரசனொருவன் வரவை எதிர்பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக்கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம் . கூழ் என்றது தன் முன்னோருந்தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால் , அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரையாளும் ஆட்சியையே இழந்துவிடு பவனாவன்.