பக்கம் எண் :

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

 

அல்லல் பட்டு ஆற்றது அழுத கண்ணீர் அன்றே - குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; செல்வத்தை தேய்க்கும் படை - அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம்.

கொடுங்கோலரசன் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத் துயரநெஞ்சே போக்கிவிடும் . அதற்கு வேற்றரசன் வினைவேண்டியதில்லை யென்பது கருத்து . செல்வத்தை யழிப்பது துயரநெஞ் சேயாயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீராதலால் , அழிப்புவினை கண்ணீரின்மே லேற்றப்பட்டது . செல்வத்தை மரமாக உருவகியாமையின் இது ஒருமருங் குருவகம் . ஏகாரம் வினா . எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் . ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்து விடுவான் என்பது கருத்து.