பக்கம் எண் :

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.

 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோலாட்சியினாலேயே ; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோ லாட்சியில்லாவிடின் அவர்க்கு இம்மையிலும் பெயரும் மதிப்பும் இல்லாமற் போம்.

ஒளி யென்பது ஒருவன் தான் வாழுநாளில் எல்லாராலும் மதிக்கப்படும் மதிப்பு. அது பெரும்பாலும் வாய்ச்சொல்லாக நிகழ்வது , புகழ் என்பது ஒருவன் இறந்த பின்பு எல்லாராலும் உயர்த்துச் சொல்லப்படும் உயர்வு . அது பெரும்பாலும் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இலக்கிய வடிவில் திகழ்வது.

"உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்" என்னும் நாலடிச் செய்யுளை ( 6 ) நோக்குக . மன்னுதல் இரண்டனுள் முன்னது நிலைபெறுதல் ; பின்னது பொருந்துதல் . கல்வி , கொடை வெற்றி முதலியனவாக ஏதுக்கள் பலவாதலின் , அவற்றினால் வரும் ஒளி புகழ்களும் பலவாயின . 'மன்னாவாம்' என்பதிலுள்ள ஆக்கச்சொல் முன்னுஞ் சென்று இயையும் . செங்கோன்மையால் என்னும் மூன்றாம் வேற்றுமையுருபும் ஒளியும் என்னும் எச்சவும்மையும் தொக்கன . நிலைபெறுதல் (மன்னுதல்) என்றது புகழ்நிலை பெறுதலை.