பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை

அஃதாவது, குடிகளும் வினைச் சுற்றமும் தானும் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யாமை. வெரு-அச்சம். வெருவருதல்-அஞ்சுதல். வெருவந்த செய்தல் கொடுச்கோன்மையின் பாற்படுதலின், இது அதன்பான் வைக்கப்பட்டது.

 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தங் கொறுப்பது வேந்து.

 

தக்காங்கு நாடி-ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்றாராய்ந்து; தலைச்செல்லா வண்ணத்தால்- அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே வேந்து- நல்லரசனாவன்.

தக்காங்கு நாடுதலாவது, குற்றஞ்சாட்டியும் குற்றஞ்சாடியும் ஆகிய இருவர் சொல்லையும் எழுதரங்கேட்டு, சான்றியங்களையும் சான்றுகளையும் காய்த லுவத்தலின்றி நடுநிலையாய் ஆராய்ந்து குற்றவாளி யாரென்று காணுதல். ஒத்தாங்கொறுத்தாலாவது கண்ணோட்டமுங் கண்ணறவுமின்றிக் குற்றத்திற்குத் தக்கதண்டனை செய்தல். தக்காங்கு நாடாமையுங் கடுந்தண்டமும் வெருவந்த செய்தலாம். தக்க ஆங்கு தக்காங்கு(தக்கவாறு). ஒத்த ஆங்கு ஒத்தாங்கு(ஒத்தவாறு).