பக்கம் எண் :

கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.

 

கடுஞ்சொல்லன் கண் இலன் ஆயின் -அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்- அவனது பெருஞ்செல்வம் நீடித்த லின்றி அப்பொழுதே கெடும்.

கடுஞ்சொல்லும் கண்ணோட்டமின்மையும் குடிகட்கு அச்சத்தை விளைத்தலின், வெருவந்த செயல்களாயின.'கண்' ஆகுபெயர். விரைந்தழியத்தகாத பெருஞ்செல்வமாயினும் என்பார்-'நெடுஞ்செல்வம்' என்றார். இனி, நீண்ட காலமாகத் தொகுக்கப் பெற்ற முன்னோர் செல்வம் எனினுமாம். ஏகாரம் பிரிநிலை. இதுகாறும் நாற்குறள்களால் குடிகளஞ்சும் வினைகளும் அவற்றின் தீய விளைவுகளும் கூறப்பட்டன.