பக்கம் எண் :

இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.

 

இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன்- செய்ய வேண்டிய கருமத்தைப்பற்றி அமைச்சரொடு கலந்து எண்ணிச் செய்யாத அரசன் ; சினத்து ஆற்றிச் சீறின்- அக்கருமந்தப்பியவழிச் சினத்தின் வயப்பட்டு அவர்மேலேற்றிச்சீறின்; திருச்சிறுகும் -அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கிவரும்.

அரசியல் வினையாற்றும் ஒப்புமையானும் உடன் கூட்டத்தைச் சுற்றமென்னும் வழக்குண்மையானும் ,அமைச்சரை இனமென்றும் ;தன் தவற்றை அவர்மேலேற்றி்ச்சீறின், அவர் நீங்கியபின் அரசப்பொறையை உடன் தாங்குவாரின்றி அரசன் கெடுவான் என்பது நோக்கி, திருச்சிறுகும் என்றும் கூறினார். இதனால் வினைச்சுற்றம் அஞ்சுவதும் அதனால் விளையுங் கேடுங் கூறப்பட்டன.