பக்கம் எண் :

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.

 

சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்-பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?; நிறை காக்கும் காப்பே தலை -அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.

சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை.