பக்கம் எண் :

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

 

கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் -கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத்துணைவராகச் சேர்த்துக்கொள்வான் ; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை -அக்கூட்டமல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்)இல்லை.

கொடுங்கோலன் செயல் அவனாட்சியின்மே லேற்றிக் கூறப்பட்டது. கற்றோர் கடுங்கோலனொடு கூடாமையிற் 'கல்லார் பிணிக்கும் ' என்றும் , ஏனையோரைப் பொறுக்கும் பொறை இயல்பாகவிருந்து பொறையாகத் தோன்றாமையின் ' அதுவல்லதில்லை நிலக்குப் பொறை' என்றுங் கூறினார்.'நிலக்கு' என்பதில் அத்துச்சாரியை தொக்கது.இதனால் நிலமும் அஞ்சும் வினை கூறப்பட்டது.