பக்கம் எண் :

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு.

 

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட வல்ல அரசர்க்கு ; இவ்வுலகு உரிமை உடைத்து - இவ்வுலகம் நிலையான உரிமையாகுந் தன்மை யுடையதாம்.

'கருமஞ் சிதையாமல் ' என்பதால் இவ்வதிகாரத்திற் கூறப்பட்டது நெறிதவறாத நற்கண்ணோட்டமே என்பது அறியப்படும். முறை தவறுமிடத்துக் கண்ணோடாமையும், தவறாவிடத்துக் கண்ணோடுதலும் அமைவது அருமையாதலின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றார். தவறுமிடமாவது கண்ணன்ன கேளிர் குற்றஞ் செய்யின் தண்டிக்க விரும்பாமை. தவறாமிடமாவது தன்னால் வெறுக்கப் படுபவன் குற்றஞ் செய்யாவிடினுந் தண்டிக்கவும் சிறு குற்றஞ் செய்யினும் பெருந்தண்டனை யிடவும் விரும்புதல். இவ்விரண்டு மின்றி நடுநிலை முறையும் நற்கண்ணோட்டமும் செய்வார்க்குக் குடிகளெல்லாரும் என்றும் அன்புடன் அடங்கி நடப்பாராகலின், 'உரிமையுடைத்திவ் வுலகு ' என்றார்.'உலகு ' அதன் பகுதியாகிய நாட்டைக் குறித்தலின் முதலாகு பெயர்.