பக்கம் எண் :

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

 

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் -தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; கண்ணோடிப்பொறுத்து ஆற்றும் பண்பே தலை - பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட முடைய ராய் அவர் குற்றத்தைப் பொறுத்தொழுகும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

இப்பொருட்கு, இந்தியா சீனாவின் வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொண்டு போவதை எடுத்துக் காட்டாகக் கொள்க. 'பண்பினார் ' என்பது அவர் வழக்கத்தை யுணர்த்திற்று.உம்மை எச்சமும் இழிவுங் கலந்தது.

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் -தம்மால் தண்டித்து அடக்கப்பட வேண்டிய குற்ற முடையாரிடத்தும்; கண்ணோட்டஞ் செய்து அவர் குற்றத்தை பொறுத்து அமையும் இயல்பே தலைசிறந்ததாம்.

இப்பொருட்கு, இந்தியா பாக்கித்தான் தாக்குதலைப் பொறுத்துக் கொண்டமைவதை எடுத்துக்காட்டாகக் கொள்க. 'பண்பினார்' என்பதும் உம்மையும் மேலனவே.

இங்ஙனம் இக்குறட்கு இருவகையாய் உரைப்பதற்குக் கரணியம்,ஒறுத்தல் என்னும் சொல் தண்டித்தல் என்றும் வருத்துதல் என்றும் இருபொருள் தருவதே.