பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 59. ஒற்றாடல்

அஃதாவது ,அரசன் தன் நாட்டிலும் தன் நாட்டைச் சூழ்ந்த பிறநாடுகளிலும் தனக்கு நட்பாகவோ பகையாகவோ வுள்ள சேய்மைநாடுகளிலும் , பகை ,நட்பு , நொதுமல் என்னும் முத்திறத்தாரிடத்தும் நிகழ்பவற்றை மறைவாக அறிதற்கு ஒற்றரை ஆளுதல். ஒற்றராவார், அவ்வக்காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுகோலம் பூண்டு பகையரசர் உவளகமும் புகுந்து ,பிறர் ஐயுறாவாறு அங்குள்ள அருமறைகளையும் மருமங்களையும் திறமையாக அறிந்து , ஐயுற்றும் அறிந்தும் பகைவராற் கைப்பற்றப் பட்டு உயிர்க்கிறுதி நேரினும் வாய் சோர்ந்து உண்மை வெளியிடாதவராய் ,செய்திகளை யெல்லாம் உடனுடன் அரசனுக்கு மறைவாக வந்து உரைக்கும் மாபெருந் திறவோரும் மறவோரும் ஆவர்.ஒற்று ,வேய் என்பன ஒருபொருட் சொற்கள் ; 39-ஆம் அதிகாரம் முதல் இதுவரை கூறப்பட்டுள்ள இலக்கணங்களை யெல்லாங் கொண்ட அரசன், தன் நாடு காவற்கும் வேற்று நாடு கைப்பற்றற்கும் ஒற்றாடல் இன்றியமையாதாதலின் ,இது அவற்றின் பின் வைக்கப்பட்டது.

 

ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.

 

ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்-ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் ஆகிய இவ்விரண்டையும்; மன்னவன் கண் தெற்று என்க-அரசன் தன் இரு கண்களாகத் தெளிக.

ஒற்றுத்தன் கண் செல்லாத இடமெல்லாஞ்சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிவித்தலானும், நூல் தன் அறிவிற்கெட்டாத வினைகளையுஞ் சூழ்ச்சிகளையுந் தெரிவித்தலானும், இவ்விரண்டையும் அரசன் முறையே தன் புறக்கண்ணாகவும் அகக்கண்ணாகவும் கொண்டு ஒழுகுக என்றார். அரசனை அரசு என்பது போல் ஒற்றனை ஒற்று என்றார். தெற்றெனல், தெளிதல் அல்லது தெளிவாதல்.