பக்கம் எண் :

எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்சான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

 

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல் அறிதல் -எல்லாரிடத்தும் நிகழ்பவை யெல்லா வற்றையும் எப்போதும் ஒற்றால் விரைந்து அறிதல் ; வேந்தன் தொழில் - அரசன் கடமையாம்.

' எல்லார்க்கும் ' முத்திறத்தாரையும். இது நான்காம் வேற்றுமை ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம் . 'எல்லாம் ' என்றது சொல் செயல் பொருள் மூன்றையும் குறிக்கும்.இடையறாது நிகழ்தலால் 'எஞ்ஞான்றும் ' என்றும், உடனுடன் நட்போ பகையோ பூணவும் கொடையோ தண்டமோ நிகழ்த்தவும் விரைந்து செய்திகளை யறியவேண்டுமாதலின் ' வல்லறிதல் ' என்றும் கூறினார். ஒற்றல் என்பது அதிகாரத்தால் வந்தது.