பக்கம் எண் :

கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.

 

கடாஅ உருவொடு -ஒற்றப்பட்டார் கண்டால் அயிர்க்கப்படாத வடிவொடு பொருந்தி ; கண் அஞ்சாது - அவர் ஒருகால் அயிர்த்து நோக்கி ஆராயத்தொடங்கின் , அவர் சினத்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாது நின்று ; யாண்டும் உகாமை வல்லதே -எவ்விடத்திலும் எவ்வழியைக் கையாளினும் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமை வல்லவனே; ஒற்று - சிறந்த ஒற்றனாவான்.

கடுத்தல் ,அயிர்த்தல் , என்பன பகைவன் அல்லது ஒற்றன் என்று ஐயுறுதல். கடாத (கடுக்காத ) வடிவாவன;துறவியர் ,வணிகர் , வழிப்போக்கர், இரப்போர் முதலியோர் தோற்றம்; உகுத்தல் சிந்துதல். அது இங்கு மறைவெளியிடுதலைக் குறித்தது, 'கடா' கடு என்னும் வினையடிப்பிறந்த ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'கடா அ ' ,'உகாஅமை' இசைநிறை யளபெடைகள்.ஏகாரம் தேற்றம்.'ஒற்று' வடிவால் அஃறிணையாதலின் அஃறிணை முடிவு கொண்டது.