பக்கம் எண் :

துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

 

துறந்தார் படிவத்தார் ஆகி - முற்றத்துறந்த முனிவரின் கோலம்பூண்டு; இறந்து ஆராய்ந்து - புகுதற்குரிய விடமெல்லாம் கோடிவரை உட்புகுந்து ஆராயவேண்டியவற்றை யெல்லாம் ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது -அங்குள்ளவர் அயிர்த்துப் பற்றி நுண்சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும் வாய் சோர்ந்து தம்மை வெளிப்படுத்தாதவரே ,ஒற்று-சிறந்த ஒற்றராவார்.

'துறந்தார் ' என்பது ஒப்புமைபற்றித் திருநீராட்டுச் செலவினையுங் குறிக்கும் .'என் செயினும் என்றது நோவுறுத்தலின் கடுமையை விளக்கி நின்றது. பரிமேலழகர் 'துறந்தார் படிவத்தர் ' என்பதை ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொள்ளாது உம்மைத் தொகையாகக் கொண்டு, முற்றத் துறந்தாராயும் விரதமொழுக்கினராயும்' என்று பொருள் கூறி ,' இதனுட் 'படிவ ' மென்றதனை வேடமாக்கித் துறந்தார் வேடத்தாராகி யென்றுரைப்பாரு முளர்.'. என்று மணக்குடவர், பரிப் பெருமாள்,பரிதியார் , காலிங்கர், ஆகிய நால்வரையும் பழிப்பர்.ஒற்றர் துறவியரின் கோலத்தராக வன்றி உண்மையான துறவியராக இருக்க முடியாது ; இருப்பின் ஒற்றராகமுடியாது. பரிமேலழகர் ' துறந்தாராயும் விரத வொழுக்கின ராயும் ' என்று கூறியது பிராமணரை நோக்கிப் போலும் ! 'துறந்தார்ப் படிவத்தராகி ' என்று தொடங்கியதால் ,'ஒற்று ' என்பது பன்மை குறித்த வகுப்பொருமையாம்.அது தன் அஃறிணை வடிவிற்கேற்ப அத்திணை முடிபுகொண்டது.