பக்கம் எண் :

மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று.

 

மறைந்தவை கேட்க வற்று ஆகி -ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களையும் அவர்க்கு உள்ளாளரைக் கேட்டறிய வல்லனாகி ; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று -தான் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றலுள்ளவனே சிறந்த ஒற்றனாவான்.

' மறைந்தவை ' சொல்வாரைத்தப்பாது அறிந்து அவரிடம் சென்று, அவர் தாமே அம்மறை பொருட்களைச் சொல்லுமாறு குரங்கெறிவிளங்காயாகச் சில சொற்களைச் சொல்லியும் சில வினைகளைச் செய்தும் , அம்மறைபொருட்களை அவர் வாயினின்று கேட்கும் போதும் அவர் தன்னை எள்ளளவும் அயிராவாறு அச்செய்தியில் தான் முற்றும் பற்றற்றவன் போல் நடித்து , அவர் சொல்வதனைத்தையுங் கேட்க வேண்டியிருத்தலின் 'கேட்க வற்றாகி ' யென்றும் ,கேட்டவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசன் இவற்றிற் கேற்ப வினைசெய்ய முடியாமற் போவதுடன் கலக்கமுங்கொள்ள நேருமாதலின் 'ஐயப்பாடில்லதே ' யென்றும், கூறினார். வல்லது -வற்று (வல்+து).ஏகாரம் தேற்றம் .'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லல் அஃறிணையாதலின், அஃறிணை முடிபு கொண்டது. இந்நான்கு குறளாலும் ஒற்றின் இலக்கணங் கூறப்பட்டது.