பக்கம் எண் :

ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.

 

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓர் ஒற்றன் ஒற்றி வந்து அறிவித்த செய்திகளையும்; மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் -வேறும் ஓரொற்றனால் ஒற்றுவித்து ஒப்பு நோக்கி உண்மை யறிந்து கொள்க.

பகைவரோ டொத்து நின்று உண்மைக்கு மாறாகக் கூறும் ஒற்றருமிருப்பராதலின் ,ஓரொற்றன் கூற்றைக்கேட்ட மட்டில் நம்பி விடக்கூடாதென்றும் , ஒற்றர் பலரையுந் தனித்தனி மறைவாகக் கேட்டு அவர் கூற்றுக்கள் ஒத்துவந்த வழியே நம்பவேண்டு மென்றும் ,பாதுகாத்துக் கூறினார். ஒற்றுதல் மறைவாகப் பொருந்தியறிதல். உம்மை யிரண்டனுள் முன்னது உயர்வு சிறப்புக் கலந்த எச்சம். பின்னது இறந்தது தழுவிய எச்சம் .இதனால் ஒற்றரை ஆளும் வகை கூறப்பட்டது.