பக்கம் எண் :

ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

 

ஒற்று ஒற்று உணராமை ஆள்க- ஒற்றரையாளுமிடத்து ஒருவனை யொருவன் உய்த்துணர்வாலும் அறியாதவாறு தனித்தனி ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும்- அங்கனம் ஆளப்பெற்ற ஒற்றர் மூவர் கூற்று ஒத்துவரின் அதையே உண்மை யென்று தெளிதல் வேண்டும்.

அரசன் ஒற்றரை ஒருவனை யொருவன் அறியாவாறு ஆண்டாலும் , பகைவர் நாட்டில் இறந்தாரையும் மறைந்தவை கேட்கவும் வல்லவரான ஒற்றர் தம் நாட்டு ஒற்றரை அரசனுக்குத் தெரியாமலே அறிந்து கொள்ளக் கூடுமாதலானும் , அவருட்சிலர் தம்முள் இசைந்து ஒப்பக்கூறலாமாதலானும் ,எல்லாரையும் அரசன் நம்பாமலிருக்கவும் முடியாதாதலானும், மூவர் சொல் ஒத்துவந்தவழி நம்புக என்று வெளிப்படையாகவும்,அங்ஙனம் வராவிடின் மேற் கொண்டும் பிறர் வாயிலாக ஆராய்ந்து உண்மை காண்க வென்று குறிப்பாகவும், கூறினார் .'படும் ' என்னும் துணைவினை 'செய்யப்படும்' (குறள்.335) என்பதிற்போல் வேண்டும் என்னும் பொருளதாம்.இதனால் ஒற்றர் கூற்றுகளை ஆராயும் வகை கூறப்பட்டது.