பக்கம் எண் :

சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

 

களிறு புதை அம்பிற் பட்டுப் பாடு ஊன்றும்-போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும் ; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் -அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர்.

உவமமும் பொருளுங் கொண்ட அடைகள் இரண்டிற்கும் பொதுவாதலின், ஒல்காமை களிற்றுடனும் பாடூன்றுதல் உரவோருடனுஞ் சென்றியைந்தன. தாம் மேற்கொண்ட வினைக்குத் தடையாகப் பேரிடுக்கண் நேரினும், தளராது தாம் கருதியதை முடிப்பர் என்பது ,உவமத்தாற் பெறப்படும்.முந்தின குறள் ஊழால் தடைப்படும் வினையையும், இக்குறள் இடையூற்றால் தடைப்பட்டு விடா முயற்சியால் வெல்லப் படும் வினையையும் குறித்தன வென வேறுபாடறிக.