பக்கம் எண் :

மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

 

குடியைக் குடியாக வேண்டுபவர் -தாம்பிறந்த குடியை மேன்மேலுயரும் நற் குடியாகச்செய்தலை விரும்புவர்; மடியை மடியாக ஒழுகல் - முயற்சியின்மையில் முயற்சியின்மை கொண்டு ஒழுகுக.

வெளிப்படையுங் குறிப்புமான எதிர்மறையின் எதிர்மறை உடன்பாடாதல் பற்றி, இன்மையின் இன்மைவேண்டும், அல்லது வறுமையின் வறுமை வேண்டும் என்று சொல்வது போல், ' மடியை மடியாக வொழுகல் ' என்றார். அது இடைவிடாது முயற்சி செய்க என்று பொருள் படுவதே. முயற்சியால் தாம் உயரவே ,தம் குடியுயரும் என்பது கருத்து.

மணக்குடவர் ' மடியா ' என்பதைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு , 'மடிசெய்தலை மடித்தொழுக' எனவுரைப்பர்.அதுவும் பொருள் கெடாமையின் குற்ற மன்றாம்.