பக்கம் எண் :

படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.

 

மடி உடையார்- சோம்பேறிகள்; படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் -மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் ; மாண் பயன் எய்தல் அரிது-அதனாற் சிறந்த பயனடைதல் இல்லை.

முயற்சியின்மையால் மாநிலமுழுதாளியரின் துணையாலும் பயனடையார் என்பதாம். உம்மை உயர்வுசிறப்பு .'மாண்பயனெய்த லரிது' என்பதால், சிறுபயனடைதல் பெறப்படும். அதுவும் அவ்வேந்தரின் துணையாலேயே வருவது என்பதும் உய்த்துணரப்படும்.

இக்குறட்குப் பரிமேலழகர் உரை வருமாறு;-
"படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் -நிலமுழுதுமாண்டாரது செல்வந்தானே வந்தெய்திய விடத்தும் ; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது -மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதலில்லை.

" உம்மை எய்தாமை விளக்கிநின்றது , ' மாண்பயன் ' பேரின்பம்....

இவ்வுரை, நிலமுழுது மாண்ட அரசனின் செல்வம் , அவன் இறந்தபின் சோம்பேறியான அவன் மகனுக்குத் பழவிறல் தாயமாக வந்ததைக் குறித்ததாயின் பொருந்துவதே.ஆயின் ,"உம்மை எய்தாமை விளக்கிநின்றது." என்று அவரே தம் உரைப் பொருத்தத்தைக் கெடுத்துக் கொண்டார்.

"மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தின மாயின் எய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே."
என்பது (புறம்.75) இங்குக் கவனிக்கத் தக்கது.