பக்கம் எண் :

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர்.

 

மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் -சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர் ;இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர்- அமைச்சர் கண்டித்து அறிவுரை கூறியும் அதைக்கேளாமையாற் பின்பு அவர் இகழ்ந்து கூறும் சொல்லைக் கேட்பர்.

சிறந்த முயற்சியே யன்றிச் சிறு முயற்சி பயன் படாதென்பார் 'மாண்ட உஞற்று' என்றார்.

இடி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.' புரிதல் ' இரண்டனுள், முன்னது செய்தல் ; பின்னது விரும்புதல் . தன்னிடத்திற்குற்ற முண்மையால் எதிர்த்துப்பேச வாயின்மை பற்றி ,' எள்ளுஞ் சொற் கேட்பர் ' என்றார். எள்ளுதல் உள்ளத் தொழிலேயாயினும் , ' எள்ளுஞ்சொல் ' என்றமையால் இங்கு இகழ்தலாகிய வாய்த்தொழிலைக் குறித்தது. சோம்பலால் உயர்வை இழத்தலோடு இகழ்ச்சிச் சொற்கேட்கும் இழிவையும் அடைவர் என்பது இங்குக் கூறப்பட்டது.

"அறிகொன் றறியா னெனினு முறுதி

யுழையிருந்தான் கூறல் கடன். (குறள்.638)

ஆதலின் , 'இடி' யென்னும் முதனிலைத் தொழிற்பெயரான் , நட்டாரென்பது பெற்றாம்." என்னும் பரிமேலழகர் சிறப்புரைக் குறிப்புப் பொருந்துவ தன்றாம்.அவர் கருத்துப்படி ,கழறுதலைச் செய்வாரெல்லாம் நட்டாரேயெனின் , அது அமைச்சர் இன்மையையோ அவர் கடமை தவறுதலையோ உணர்த்துதல் காண்க.