பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 7. மக்கட்பேறு

அஃதாவது, இனப்பெருக்கத்திற்கும் உலக நடப்புத் தொடர்ச்சிக்கும் இறைவன் வகுத்த இயற்கையான ஏற்பாட்டின்படியும், தத்தம் தொழிலில் தமக்கு உதவி செய்தற்பொருட்டும், உழைக்க இயலாத முதுமைக்காலத்தில் தம்மைப் பேணும் பொருட்டும், தாம் இறந்தபின் தம் பெயரால் அறஞ்செய்தற் பொருட்டும், தம் பெயரை இவ்வுலகில் நிலவச்செய்தற் பொருட்டும், பிள்ளைகளைப் பெறுதல்.

 

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

 

பெறு மவற்றுள்-இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத;பிற - வேறு சிறந்தவற்றை, யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை.

அறிவு என்பது அறிவைத்தரும் நூலைக் குறித்தலால் கருமிய, (காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. பெற்றோர், பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப் பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும்.