பக்கம் எண் :

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் ; பேடிகை வாள் ஆண்மை போலக் கெடும் - போருக்கு அஞ்சும்பேடி போர்க்களத்தில் தன் கையிலுள்ளவாளைப் பயன்படுத்துதல் போல் இல்செயலாம்.

பேடிக்கு வாளாண்மை இல்லாததுபோல ,விடா முயற்சியில்லானுக்குத் தாளாண்மை யில்லை யென்பதாம். ஆண்மை - ஆளுந்தன்மை. ஆளுதல் - பயன்படுத்துதல் . 'வாளாண்மை' யென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மையென்று சிலர் உரைத்திருப்பதாகத் தெரிகின்றது. அது வேறு ஆண்மை யுண்மையைக் குறிப்பதால் ,அது உரையன்மை அறிக. பெள் -பெண் -பெண் -பேடு -பேடன் , பேடி. ஆண்டன்மையை விரும்பும் பெண் பேடன்; பெண்டன்மையை விரும்பும் ஆண்பேடி . இப்பாகுபாடு பாலுறவு பற்றியதேயன்றிப் போர்மறம் பற்றிய தன்று .பேடியருள் போர்மறம் உள்ளவரும் உளர்; இல்லாதவரும் உளர். இங்குக் குறிக்கப்பட்ட பேடி அஃதில்லாத வகையென அறிக. பேடிக்கு வாளைப்போரிலாள விருப்ப மிருப்பினும் அச்சத்தாற் கூடாமை போல, விடாமுயற்சி யில்லானுக்கு வேளாண்மைமேல் விருப்பமிருப்பினும் வறுமையாற் கூடா தென்பதை யுணர்த்தற்கு ,இல்லை யென்னாது 'கெடும்' என்றார்.