பக்கம் எண் :

இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்.

 

இன்பம் விழையான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினை முடித்தலையே விரும்புகின்றவன்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்- தன் சுற்றமாகிய பொறையின் (பாரத்தின்) வறுமையைப் போக்கி அதைத் தாங்கும் தூணாவன்.

விடா முயற்சியுடையான் மெய்வருத்தம் பாரானாதலின் ' இன்பம் விழையான் ' என்றும் , தன்னலங் கருதாது முயற்சியால் வினை முடித்துப் பெரும்பொருள் பெற்றவன் தன் கிளைஞரைப் பேணுவானாதலின், 'தன்கேளிர்....தூண்' என்றும் ,கூறினார்.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் -செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணணாயி னார்' . (நீதிநெறி.53).

"செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். (வெ.வே.3).
என்பதால் ,கிளைஞரைத் தூண்போல் தாங்குதல் செல்வர் கடமையென்பது பெறப்படும் . 'துடைத்து' என்பது வறுமையை அறவே நீக்குதலையும் , 'ஊன்றுந்தூண்' நிலையாகத் தாங்குதலையும் குறிக்கும். இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐம்புலத்துள் ஒக்கலும் ஒன்றாதல் காண்க (குறள்.43). கேளிரைப் பொறையாக வுருவகியாமையால் இதில் வந்துள்ள அணி ஒருமருங்குருவகம்.