பக்கம் எண் :

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

 

தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது.

ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.