பக்கம் எண் :

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

 

பழிபிறங்காப் பண்புஉடை மக்கட்பெறின் - பழிதோன்றாத நற்குணங்களையுடைய மக்களைப் பெறின்; எழுபிறப்பும் தீயவை தீண்டா - பெற்றோரை எழுபிறவி யளவும் துன்பங்கள் அணுகா.

பண்பு என்றது பெற்றோரை நோக்கி அறஞ்செய்வதற்கேற்ற நற்குணத்தை பிள்ளைகள் செய்யும் நல்வினையாற் பெற்றோரின் தீவினைதேயும் என்னும் கருத்துப்பற்றி, "எழுபிறப்புந் தீயவை தீண்டா" என்றார். நிலைத்திணை ( தாவரம்) நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்னும் எழுவகைப் பிறப்பினும் தீயவை தீண்டா என்பது, பிறப்பின் வகை பற்றியும் தொகை பற்றியும் பொருந்தாமையின், எழு மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. இதுவும் ஒருவகை உயர்வு நவிற்சியே. ஏழு என்பது ஒரு நிறை வெண்; ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது.

பிறங்குதல் விளங்குதல். கண்ணோட்டம் அல்லது அச்சம் பற்றி ஒருவரைப் பிறர் பழியாமலுமிருக்க லாமாதலின், "பிறராற் பழிக்கப் படாத" மக்கள் என்பது முற்றும் பொருந்தாது.