பக்கம் எண் :

மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

 

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - தடை ஏற்பட்ட விடமெல்லாம் பொறைவண்டி யழுந்தாது அதை இழுத்துச் செல்லும் எருதுபோல் எடுத்துக் கொண்ட வினையை விடா முயற்சியுடன் வெற்றியுறச் செய்து முடிக்க வல்லவனை ; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - அடைந்த துன்பம் தானே துன்பப் படுதலை யுடையதாம்.

'மடுத்தவாயெல்லாம்' என்பன மேடு, பள்ளம், மணல் , சேறு முதலியனவாம். பகட்டின் தொழிலை

"நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து
பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி
மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி"


என்பதனாலும் (சீவக.2784), பகடன்ணான் இயல்பை.

"கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்"


என்பதனாலும் (புறம், 60), அறிக.