பக்கம் எண் :

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.

 

தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் மக்களைத் தம் செல்வமென்று பாராட்டுவர் பெற்றோர்; அவர் பொருள் தம்தம் வினையான் வரும் - அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக் கேற்றவாறு வரும்.

இம்மையிலும் மறுமையிலுமாக எதிர்காலத்தில் தம் மக்கள் தமக்குச் செய்யக்கூடிய நன்மையை எள்ளளவும் எதிர்நோக்காதே, அவர்களைக் குழவிப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் தம் சிறந்த செல்வமாகப் பாராட்டுவது பெற்றோர் வழக்கம். மக்களைப் பெற்றோரின் உடைமையாகக் குறிக்கும்போதே அவ்வுடைமைகளும் பின்பு பெற்றோரைப்போல உடையோராக மாறும் நிலைமையிருத்தலால், அம்மாறுநிலைத் தொடர்ச்சியைக் காட்டற்கே அவர் பொருள் தந்தம் வினையான் வரும் என்றார். அது கரணிய (காரண)க் கிளவியமாயின், 'தம்வினை யான்வர லான்' என்றே அமைத்திருப்பார்.