பக்கம் எண் :

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு.

 

இன்னாமை இன்பம் எனக்கொளின் -ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் தனக்கு இன்பமாகக் கருதுவானாயின்; தனக்கு ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் அவன் பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

இறைவனால் தடுக்கப்படாத எல்லா வினைக்கும் துன்பம் ஒன்றே தடையாதலின் , அத்துன்பத்தை இன்பமாகக் கொள்பவன் தொடங்கிய வினை யெல்லாம் வெற்றியாக முடியும் என்பது கருத்து. ஒன்னார் விழைதலாவது பாராட்டிப்பகை தீர்தல். 'கொளின்' என்பது கொள்வதன் அருமை யுணர்த்திநின்றது, துன்பத்தை இன்பமாகக் கொள்வது ஓகத்தால் ஓதி (ஞானம்) பெற்ற துறவியர் இயல்பாதலின், அவ்வுயர்நிலை யடைந்தமை பற்றி 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' உண்டாகும் எனினுமாம்.


அரசியல் முற்றிற்று.