பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 64. அமைச்சு

இது காறும் அரசன் இலக்கணங்களையும் கடமைளையும் வினை செய்யும் முறைகளையும் கூறியவர், இனி அரசியலின் ஏழுறுப்புக் களையும் 45 அதிகாரத்தால் கூறுமாறு எடுத்துக்கொண்டு, அவற்றுள் ஆட்சிக்கு இன்றியமையாத் துணையும் அரசனுக்கு அடுத்தபடியாகச் சிறப்பு வாய்ந்தவனுமான அமைச்சன் இயலையுஞ் செயலையும் பத்ததிகாரத்தாற் கூறத் தொடங்கி,முதற்கண் அமைச்சிலக் கணங் கூறுகின்றார்.

அமைச்சு

அஃதாவது, அமைச்சனின் இலக்கணமுங் கடமையும்.

 

கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு.

 

கருவியும் - வினைக்கு வேண்டுங் கருவிகளும்; காலமும் - அதற்கேற்ற காலமும், செய்கையும் - அதைச் செய்யும் வகையும்; செய்யும் அருவினையும் - அவ்வகையிற் செய்யும் அரிய வினையும்; மாண்டது அமைச்சு - வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.

'கருவிகள்' படையும் படைக்கலமும் பொருளும் துணையும். 'காலம்' தொடங்கி முடிக்குங் காலங்கள். 'செய்கை' நால்வகை ஆம்புடையும் (உபாயமும்), தொடங்கும் வகையும், கையாளும் விரகும் (தந்திரமும்), இடையூறு நீக்கும் வழியும் ஆம். பெரும் பயன்தரும் சிறந்த வினையென்பார் 'அருவினை' என்றார். 'அமைச்சு' சொல்லால் அஃறிணையாதலின் அத்திணை முடிபு கொண்டது. இதே பின்னுங் கொள்க.

"இவை யைந்தினையும் வட நூலார் மந்திரத்திற்கங்க மென்ப". என்று பரிமேலழகர் கூறுவதால், வடநூலுக்குத் தமிழ்நூல் முதனூ லானமைதெளிவாம். இக்குறளிற் கூறப்பட்டவை நான்கேயன்றி ஐந்தல்ல. செய்கையைத் தொடக்கமும் முடிவும் என இரண்டாக வட நூலார் பிரித்தது வீணான பிற்கால விரிவுபாடாகும். திருக்குறளை வட நூல் வழியாகக் காட்டல் வேண்டியே, ' செய்கை' எனவே, அது தொடங்கு முபாயமும் இடையூறு நீக்கி முடிபு போக்குமாறும் அடங்கின." என்று பரிமேலழகர் தம் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்க.