பக்கம் எண் :

வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

 

வன்கண் - மனவுறுதியும்; குடி -நற்குடிப் பிறப்பும்; காத்தல் - குடிகளைக் காத்தலும்; கற்றறிதல் - அறநூல்களையும் அரசியல் நூல்களையும் கற்று வேண்டுவன விலக்குவன அறிதலும்; ஆள்வினை யோடு - முயற்சி யோடுகூடிய; ஐந்து உடன் மாண்டது அமைச்சு - ஐங்கூறுகளும் ஒருங்கே சிறப்பாக அமைந்தவனே அமைச்சனாவான்.

'குடி' யென்றது வேளாண்குடியை, இதை,
நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்
அந்த வரசே யரசு. (ஒளவையார் தனிப்பாடல்)


என்பதனால் அறிக. 'குடிகாத்தல்' என்பதனை ஒன்றாக்கிக் ' கற்றறிதல்' என்பதைக் கற்றலும் அறிதலும் என இரண்டாகப் பகுத்தல் ஒரு சிறிதும் பொருந்தாது. கற்றலே அறிதலாதலின், அது இரண்டாகாமை அறிக. 'ஐந்தும்' என்னும் முற்றும்மை தொக்கது. ஆள் வினையோடு கூடி என எச்சமாக்கின், இவ்வைந்தும் எனச்சுட்டு வருவிக்க.

பரிமேலழகர் முந்தின குறளில் நாற்கூற்றை ஐங்கூறாக்கிய குற்றத்தை நிலைநிறுத்தவே , இக்குறளில் ஐங்கூற்றை நாற்கூறாக்கிக், "குடிகாத்தல் -குடிகளைக் காத்தலும்" என்று உரை கூறினார். மேலும், மேற்குறளிற்கும் இதற்கும் முடிபோட்டு, "மேற்சொல்லிய அவ்வங்கங்களைந்துடனே திருந்தவுடையானே அமைச்சனாவான் " என்றும் , அவ்வைந்தெனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற் கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது, அவையுமிவற்றோடு கூடியே மாட்சிமைப் படவேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்தென்னும் தொகை பெறுதற்கும். "என்றும்," ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லவேண்டும். என்னும் பழமொழியை மெய்ப்பித்தார். மேற்குறள் ஒழுங்காக எண்ணும்மை பெற்றுத் தனியாக முடிந்து நிற்பதையும், இவ்வதிகாரத்தின் முதலைந்து குறள்களும் அமைச்சனின் வெவ்வே றிலக்கணத்தைக் கூறித் தனித்தனி முடிந்து நிற்பதையும் நோக்குக.