பக்கம் எண் :

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

 

பிரித்தலும் -போர் வந்தவிடத்துப் பகைவரின் துணைவரை அவரினின்று பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம் துணைவரைத் தம்மினின்று பிரியாவாறு இன்சொல்லாலும் கொடையாலும் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்பு தம்மினின்றும் தம் துணைவரினின்றும் பிரிந்து போனவரைத்தேவையாயின் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான்.

பிரித்தலுள் , பகைவரின் துணைவரை ஒருவரோடொருவர் கூடாவாறு வேறுபடுத்தலும் ; பேணிக்கொளலுள், புதிதாகத் தமக்கு நட்பாக வருபவரைப் போற்றிக் கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலுள், உண்மை யன்பில்லாதவ ரிடத்தில் தாமும் அன்புள்ளவர் போல் நடித்தலும்; அடங்கும். இனி, இரசியமும் சீனமும் போலப் பகைவர் தாமாகப் பிரிந்துபோம் போது அப்பிரிவினையை ஊக்குதலும் , பிரித்தலுள் அடங்கும். இங்ஙனம் அவ்வப்பொழுதை நிலைக்கேற்றவாறும், சிலவற்றை மறைவாகவும் சில வற்றைவெளிப் படையாகவும் , செய்யவேண்டியிருத்தலின், 'வல்லது' என்றார்.