பக்கம் எண் :

தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு.

 

தெரிதலும் -ஒரு வினையைச் செய்யும் வகைபலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை அல்லது முழுவாய்ப்பாகவுள்ளதை ஆராய்ந்து அறிதலும்; தேர்ந்து செயலும் -அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக் கேதுவான வழிகளைக் கையாளுதலும்; ஒருதலையாச் சொல்லலும் - சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத்தக்க தென்று திட்டவட்டமாகச் சொல்லுதலும்; வல்லது அமைச்சு -வல்லவனே அமைச்சனாவான்.

ஐயுறவாகவும் கவர்படவும் சொல்லின் வெற்றியின்மையொடு கேடாகவும் முடியுமாதலின், 'ஒருதலையா' என்றார்.