பக்கம் எண் :

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை.

 

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசியலறங்களை யறிந்து தனக்குரிய கல்விநிறைந்து அடங்கிய சொல்லையுடையவனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்திற் கேற்பவும் வினைசெய்யுந் திறங்களை அறிந்தவன் , தேர்ச்சித் துணை - அரசனுக்குச் சூழ்ச்சித் துணையாவான்.

இயற்கையால் தட்பவெப்பநிலை வேறுபட்டகாலங்களும், அரசனது செல்வநிலை வேறுபட்ட காலங்களும், பகையரசன் முன்னறிவிப்பின்றித் திடுமென்று வந்து தாக்குங்காலமும் உட்பட , 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதன் ஈற்றை ஒடுவுருபின் பொருள தாகிய ஆனுருபாகக் கொண்டு உரைப்பினும் பொருள் சிதையாதாம்.