பக்கம் எண் :

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.

 

மதி நுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையான நுண்மதியைச் செயற்கையான நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு; அதிநுட்பம் முன் நிற்பவையா உள - சூழ்ச்சிக் கெட்டாத மிக நுண்ணிய செய்திகளாக எதிர்நிற்பவை எவை உள? எதுவுமில்லை.

மதிநுட்பம் இயற்கைப் பேறாதலின் முற்கூறப்பட்டது. நுண்மதியும் பரந்த நூலறிவு முடையார்க்குச் சூழ்ச்சியால் வெல்ல முடியாத சிக்கலான நிலைமை எதுவுமில்லை யென்பது கருத்து, 'நூல்', 'அதிநுட்பம்' என்பன ஆகு பொருளன. 'அதினுட்பம்' என்று பாடங்கொண்டு, "அதனினும் நுண்ணியவாய் மாற்றாரால் எண்ணப்பட்டு எதிர்நிற்கும் வினைகள் யாவுள?" என்றுரைப்பர் மணக்குடவர்.