பக்கம் எண் :

அறிகொன் றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்.

 

அறிகொன்று அறியான் எனினும்- அரசன் தன் அமைச்சர் அறிந்து கூறியவற்றை அழித்துத்தானும் அறியாதவனே யாயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி அவனை அவன் விருப்பம் போல் விட்டு விடாது அவனுக்கு நன்மையான வற்றை எடுத்துச் சொல்லுதல் அமைச்சன் கடமையாம்.

அரசனது வெறுப்பைத் தேடிக் கொள்வதாயிருப்பினும், அவனுக்கு ஆக்கமானதைக் சொல்வதே அமைச்சன் கடமை என்பதாம். 'அறி' முதனிலைத்தொழிலாகுபெயர். அறிகொல்லுதலாவது, அறிவுரையைக் கொள்ளாததுடன் பழித்துங் கூறுதல். அரசனருகிலிருப்பதால் அமைச்சன் 'உழையிருந்தான்' எனப்பட்டான். அமைச்சன் உறுதி கூறாவிடின் அரசன் இறுதியடைவதற்கு அமைச்சனையே உலகம் பொறுப்பாளியாகக் கொள்ளுமாதலின், 'கூறல் கடன்' என்றார்.

"உழையிருந்தான் ' எனப் பெயர் கொடுத்தார், அமாத்தியர் என்னும் வடமொழிப்பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். " என்றார் பரிமேலழகர். அமைச்சன் , உழையிருந்தான் என்னும் இருபெயரும் தமிழ்ச்சொல்லே யென்பதைப் பின்னிணைப்பிற்காண்க.