பக்கம் எண் :

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.

 

திறப்பாடு இலாதவர் -வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; முறைப்படச் சூழ்ந்தும் -செய்யவேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும் ; முடிவிலவே செய்வர் - செய்யுங்கால் முற்றுப் பெறாதனவாகவே விடுவர்.

திறப்பாடாவது , வந்த வந்த இடையூற்றை உடனுடன் விலக்குதலும் ஆள் வினையில் உறுதியாயிருத்தலுமாம். 'இலாஅ' இசை நிறையளபெடை. திறப்பாடிலாதவர் பழுதெண்ணுவாரைப்போல் தண்டனைக்குரியவ ரல்லரேனும் விலக்கப் படவேண்டியவரே என்பது கருத்தாம்.