பக்கம் எண் :

விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

 

நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் -சொல்ல வேண்டிய செய்திகளை ஒழுங்கான வரிசைப்படுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால்; ஞாலம் விரைந்து தொழில் கேட்கும் - உலகம் விரைந்து அவர் ஏவல்கேட்டு நடக்கும்.

தொழில்கேட்டல் என்பது இப்பொருளதாதலை, "தொன்று மொழிந்து தொழில் கேட்ப "(மதுரைக் 72) என்பதனால் அறிக. 'ஞாலம்' இடவாகுபெயர். நிரத்தல் முன்பின் முறைதவறாது அமைத்தல். 'பெறின்' என்பது சொல்வன்மையாளரின் அருமை யுணர்த்தி நின்றது.

"ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயி னுண்டென் றறு."


என்பது பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனிப்பாடல். சொல்லுதல் வல்லான் நூறாயிரவருளொருவன் என்ற வடமொழிபற்றிப் 'பெறின்' என்றார் என்று இங்கும் பரிமேலழகர் சிறிது நஞ்சைத்தம் உள்ளத்தினின்று வீழ்த்தியுள்ளார்.