பக்கம் எண் :

ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் - தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் வறியனாயினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க-அத் தாயின் பசியைத் தணித்தற் பொருட்டு அறிவுடையோர் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யா தொழிக.

"ஈன்றாளின் என்ன கடவுளும்இல்," என்பது நான்மணிக்கடிகை. (ருச). 'ஈன்றாள் பசிகாண்பா னாயினும்' என்பது, பசித்தவள் ஈன்றாளே யாயினும் என்று பொருள் படுவதால், உம்மை உயர்வு சிறப்பாம்.

"இறந்த மூப்பினராய இருமுது குரவருங் கற்புடை மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக வென்னும் அறநூற் பொது விதி, பொருணூல் வழி யொழுகுதலும் அரசர் தொழிற்குரிய ராதலும் நன்கு மதிக்கற் பாடு முடைய அமைச்சர்க் கெய்தாமை பற்றி இவ்வாறு கூறினார்." என்று பரிமேலழகரே கூறியிருத்தலால், ஆரிய அறத்தினும் தமிழ அறம் நனிதவச் சிறந்த தென்பதை அவர் வாய் ஒப்புக்கொள்ளா விடினும் உள்ளம் ஒப்புக்கொள்கின்ற தென்பதும், "அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்." என்று அவர் தம் உரைமுகத்திற் கூறியிருப்பது இதனால் அடிபடுகின்ற தென்பதும் அறியப்படும்.