பக்கம் எண் :

பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

 

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்-அறிவிலாதார் தீவினைகளைச் செய்து அவற்றாற் பழியைத் தம் தலைமேல் ஏற்றுக் கொண்டு பெற்ற செல்வத்தைவிட; சான்றோர் கழிநல்குரவேதலை-அப்பழியை மேற்கொள்ளாத அறிவுடையோரின் கடுவறுமையே சிறந்ததாம்.

சான்றோர் அறிவு அல்லது நற்குணம் நிறைந்தோர். தீயோர் செல்வம் இம்மைக்குப் பழியும் மறுமைக்குத் துன்பமும் பயத்தலால், அவ்விரண்டு மில்லாத நல்லோர் வறுமை அதனினுஞ் சிறந்தது என்றார். கொடிய வறுமை யாயினும் என்பார் 'கழிநல்குரவு' என்றார். கொடிய வறுமையாவது, நாள்முழுதும் வருந்தியுழைத்தும் வருவது ஒருவேளையுணவிற்கும் பற்றாமை. ஏகாரம் பிரிநிலை.