பக்கம் எண் :

அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்-ஒருவன் தீய வினைகளைச் செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வ மெல்லாம் இம்மையிலேயே தான் அங்ஙனம் வருந்து மாறு தன்னை விட்டு நீங்கிப்போம்; நல் பாலவை இழப்பினும் பின் பயக்கும்-தூய வினைகளால் வந்த பொருள்களோ முன்பு இழக்கப்படினும் பின்பு வந்து பயன் தரும்.

தீயவழிச் செல்வம் வருவது போற் போவது மட்டு மன்றி, வந்த வகையிலேயே போமென்பதை யுணர்த்தற்கு 'அழப்போம்' என்றார். 'இழப்பினும்' ஐயவும்மை. 'பின்' என்றது இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாம்.